திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன்.
2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என
காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித்
தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும்
சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எதிர்கொள்ளும். திமுக
தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பது
காங்கிரஸ் கட்சியின் இலக்கல்ல. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் வேறு
எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை திமுக தலைவர் முடிவு செய்வார்"
என்றார்.
இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன், தமிழக
காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்தியப் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்,
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர்
உடனிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும்
என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்திருந்தார். இதனால் திமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என செய்தி
வெளியானது.
ஆனால், பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என மு.க.ஸ்டாலினும்,
திமுகவுடன் கூட்டணி என கற்பனைகூட செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர்
இல.கணேசனும் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் காரிய
கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி
ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக