சென்னை - சைதாபேட்டையில் உள்ள அடையாற்றின் பாலம். | படங்கள்: கே.வி.சீனிவாசன்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், அடையாற்றின் கரையோரம் வசித்து வந்த 11,385 பேர் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது.
பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் ஒரே வாரத்தில் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று உபரி நீர் திறந்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடையாற்றின் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சைதாபேட்டை, கோட்டூர் ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 11 ஆயிரத்து 385 பேரை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி, 15 நிவாரண முகாம்களைத் திறந்து, அதில் தங்கவைத்தனர்.
பொதுமக்கள் பணம், நகை, அடையாள ஆவணங்கள், கல்வி ஆவணங்கள் மற்றும் துணி, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நிவாரண முகாம்களில் தங்கினர். அப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த ஆடுகள், மாடுகள், கோழிகள் அனைத்தும் மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக 137-வது வார்டு சூளைப்பள்ளம் பகுதியில் மட்டும் 4 ஆயிரம் பேரும், 178-வது வார்டு கோட்டூர் சித்ராநகர் பகுதியில் மட்டும் 2500 பேரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலில் விநாடிக்கு 1000 கனஅடியாக இருந்த உபரி நீர் திறப்பு, நேற்று இரவு 10-க்கு நீர் வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியை எட்டியபோது, அதே அளவு வெளியேற்றப்பட்டது. இது இன்று காலை 10 மணி வரை நீடித்தது. இதனால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் இருந்த வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தது.
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக குறைந்ததை அடுத்து, வெளியேற்றம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
அடையாற்றின் கரையோரம் வீடுகள் மூழ்கியுள்ள பகுதியில், திருட்டை தடுக்க போலீஸார் ரோத்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதை அவ்வழியே சென்ற ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர். அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்றார்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால், வெளியேற்ற அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வராமல் இருந்தால், வரத்து குறைந்து, வெளியேற்றத்தின் அளவும் குறைந்துவிடும். அடையாற்றில் வெள்ளமும் படிப்படியாக குறையும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக