google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: உழவு, சுகாதாரத் திட்டங்கள் வரவேற்கத்தக்கது: வருமான வரி ஏமாற்றம்- ராமதாஸ்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

உழவு, சுகாதாரத் திட்டங்கள் வரவேற்கத்தக்கது: வருமான வரி ஏமாற்றம்- ராமதாஸ்

By DN, சென்னை
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை போன்ற சில அறிவிப்புகள் ஏமாற்றமளித்தாலும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மற்றும் ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது போன்ற சில அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கும் போதிலும், ஒப்பீட்டளவில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மற்றும் ஊரக வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
நாட்டில் சமத்துவத்தையும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண்துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு, 28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதியை ஏற்படுத்துதல், மொத்தம் 89 பாசனத் திட்டங்களை செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 5 லட்சம் பாசனக் குளங்கள், 10 லட்சம் இயற்கை உரக் குழிகள் ஏற்படுத்துதல், பாசனத்திட்டங்களுக்கு நிதிஉதவி செய்வதற்காக நபார்டு வங்கியில் ரூ.20,000 கோடியில் தனி நிதியம் ஏற்படுத்துதல், ஆன்லைன் கொள்முதல் வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை வேளாண்துறை வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும்.
ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த இவை மட்டும் போதாது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வேளாண் திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாத நிலையில், புதிய திட்டங்கள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சமூகத் துறைகளுக்கு கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக ரூ.1,51,581 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இத்துறைகளில் மக்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற இந்த நிதி போதுமானதல்ல. ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மருத்துவக் காப்பீடு, முதியோர் இருந்தால் ரூ.30,000 கூடுதல் ஒதுக்கீடு, 3000 குறைந்த விலை மருந்துக்கடைகள் திறப்பு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதியை ஏற்படுத்துதல், டயாலிசிஸ் கட்டணத்தை குறைக்கும் வகையில் சில வரிச்சலுகைகள் ஆகிய அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.
அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் பாராட்டத்தக்கது. இதன் மூலம் ஏழைப் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறையில் 20 உயர்கல்வி நிறுவனங்களை உயர்கல்வி நிறுவனங்களாக உயர்த்த நடவடிக்கை, உயர்கல்விக்கு நிதி உதவி வழங்க ரூ.1000 கோடியில் நிதியம் ஆகியவை போதுமானவை அல்ல என்ற போதிலும் நல்ல தொடக்கம் ஆகும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை வளர்க்கும்  நோக்குடன் 1500 திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்படவிருப்பதும் நல்ல முன்முயற்சி ஆகும். உட்கட்டமைப்பு மேம்பாடு, முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கான வரி மற்றும் வட்டிச் சலுகை ஆகியவற்றுக்கான திட்டங்களும் வரவேற்கத்தக்கவை.
புகையிலைப் பொருட்களுக்கான உற்பத்தி வரி 10 விழுக்காட்டிலிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனினும், புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க  இந்நடவடிக்கை  முழு அளவில் பயனளிக்காது. இந்த வரி இன்னும் பல மடங்கு உயர்த்தப்பட வேண்டும். மறைக்கப்பட்ட வருவாயை கணக்கில் காட்டி 45% வரி செலுத்தும் திட்டமும் வரவேற்கப்பட வேண்டியதாகும். இதன்மூலம் நாட்டில் கருப்புப் பணம் குறையும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பயனளிக்கும்.
வரி சார்ந்த அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு சில சலுகைகளை அறிவித்து விட்டு, உச்சவரம்பை அதிகரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பணவீக்கமும், அதன்காரணமாக விலைவாசியும் அதிகரித்துவிட்ட நிலையில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது அரசு ஊழியர்கள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரை பாதிக்கும்.
ரூ.20,670 கோடி அளவுக்கு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதும் விலைவாசி உயர வழி வகுக்கும். அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு மருத்துவம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் மத்திய பொது நிதி நிலை அறிக்கையில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது.

மத்திய நிதி நிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கும் போதிலும் இவை வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருந்து விடக் கூடாது. இந்த திட்டங்களை துல்லியமான கால இலக்கு நிர்ணயித்து அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார் ராமதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக