google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்- பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை

வியாழன், 27 செப்டம்பர், 2018

சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்- பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை

சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்- பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை
சென்னை:

தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமையேற்ற பின்னரே, தமிழக கோவில்களில் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் களவாடப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான இவருக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தது.

இவைகளை தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து திருடி அந்த வீட்டில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீனதயாளனின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது கூட்டாளிகள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார்.

அதன் அடிப்படையில் அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று காலை மீண்டும் தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினருடன் ரன்வீர்ஷாவின் வீட்டுக்கு சென்றார்.

சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு உதவியாக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அங்கு சென்றனர்.

இந்த சோதனையின் ரன்வீர்ஷாவின் வீட்டில் குவியல் குவியலாக சிலைகள் இருந்தது. இதனை பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 82 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதில் ஐம்பொன் சிலைகளும் அடங்கும். அனைத்தையும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பறிமுதல் செய்தார். இந்த சிலைகளில் பெரும்பாலானவை அசைக்க முடியாத அளவுக்கு வலுவானதாக உள்ளது.

கோவில்களில் காணப்படும் பிரமாண்டமான கல் சிலைகளும் ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்தது. இந்த சிலைகளை கிரேன் மூலம் தூக்கி லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லவும் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சிலைகளை கொண்டு செல்ல 5 லாரிகள் தேவைப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சோதனை காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீட்டில் சோதனை முடிந்ததும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

இன்று மொத்தம் 89 சிலைகள், கல்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 82 சிலைகள் ஐகோர்ட்டு உத்தரவு படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிலைகள் அனைத்தும் மிக பழமையானவை. கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இந்த சிலைகளை வைப்பதற்கு அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என்று சொல்லி விட்டனர். எனவே கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தற்காலிகமாக வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இன்று கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளில் 12 சிலைகள் மிக தொன்மையான ஐம்பொன் சிலைகள் ஆகும். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதம் சிலைகளை தீனதயாளனே ரன்வீர்ஷாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அது தொடர்பான தகவல்களை தமிழக அரசுக்கு சரியாக தெரிவிக்கவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு பரபரப்பான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட்டில் தெரிவித்தது.

இதன் காரணமாக சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில்தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தொழில் அதிபர் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்- யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. தொழில் அதிபர் ரன்வீர்ஷா ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஒரு சினிமாவிலும் அவர் தலைகாட்டி உள்ளார். மின்சார கனவு படத்தில் அவர் நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சினிமா பிரபலங்கள் யாருக்கும் சிலை கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ரன்வீர்ஷாவுடன் சிலை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவை என்று சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். எனவே விசாரணை முடிவில் ரன்வீர்ஷாவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிலை கடத்தலில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சினிமா இயக்குனர் வி.சேகரும் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

சிலை கடத்தல் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே வேகமாக இயங்கி வருகிறது. அதற்கு முன்னர் பெயரளவுக்கு மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.

சிலை கடத்தலில் போலீசாரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததையும் பொன். மாணிக்கவேல் கண்டு பிடித்தார்.

அந்த வகையில் அறநிலையத்துறை இணை ஆணையரான கவிதா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலை தடுப்பு பிரிவில் பணியாற்றிய 2 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #StatueSmuggling #PonManickavel 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக