புதுடெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தபோது பணப்பட்டுவாடா மற்றும் சட்ட விரோதமாக பணம் பதுக்கி வைத்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து, தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெற்றிப் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. அப்போது அதிமுக இரண்டாக உடைந்திருந்தது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு சசிகலா தலைமை தாங்கிய நிலையில், இந்த அணி சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் களத்தில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்களும் செயல்பட்டனர். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி மாநிலம் முழுவதும் சுமார் 50 இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. சுமார் ரூ.89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்திருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதிமுக அணிகள் இணைந்தும், மதுசூதனன் தோல்வியை தழுவினார்.
வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய பிறகு, இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, வருமான வரி துறை சார்பில், ரெய்டு தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனிடமும், தமிழக அரசிடமும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானவரித் துறை சோதனையின் போது திரட்டப்பட்ட தகவல்கள், பணப்பட்டுவாடா மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு தலா ரூ.20 டோக்கன் கொடுத்தது, மதுசூதனன் தரப்பில் பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலரை கைதும் செய்தனர். ஆனால், பணப்பட்டுவாடா, ரெய்டு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் ெதாடர்பாக, மேல் நடவடிக்கையின்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் காகா ராதாகிருஷ்ணன் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது தொடரப்பட்ட வழக்குகளின் மீது, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது ெதாடரப்பட்ட வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக