சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பதிவு: நவம்பர் 09, 2018 13:36 PM
சென்னை,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படத்தை மறு தணிக்கை செய்யும் பணிகள் முடிந்தன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜூ மேலும் கூறும் போது, “மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்புக்குழு உறுதி அளித்ததால், பிரச்சினை முடிந்தது எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, முதல்வர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்கவில்லை” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக