google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்றவர்: 15 ஆண்டுகளுக்கு பின்னர் கீதா இந்தியா திரும்பினார்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்றவர்: 15 ஆண்டுகளுக்கு பின்னர் கீதா இந்தியா திரும்பினார்


புதுடெல்லி

பாகிஸ்தானுக்கு தவறுதலாக சென்ற இந்திய பெண் கீதா 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை இந்தியாவுக்கு திரும்பினார்.

பாகிஸ்தானுக்கு சென்றார்

இந்தியாவை சேர்ந்த வாய் பேசாத-காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கீதா. இவருக்கு இப்போது 23 வயதாகிறது. 15 வருடங்களுக்கு முன்பு தனது 8-வது வயதில் அவர் இந்தியா-பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவறுதலாக ஏறி பாகிஸ்தானை அடைந்தார்.

அங்குள்ள லாகூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் தனியாக உட்கார்ந்திருந்த அவரை பாகிஸ்தான் போலீசார் மீட்டனர். அங்குள்ள ‘எத்தி பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த பில்குயீஸ் எத்தி கீதாவை தத்தெடுத்துக் கொண்டார். எத்தியின் பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து கீதா வளர்ந்தார்.

‘பஜ்ரங்கி பாய்ஜான்’

நடிகர் சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இந்தி படம் பாகிஸ்தானில் வெளியான பின்னர் கீதாவின் கதை வெளியே தெரியவந்தது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியானது. கீதாவின் வாழ்க்கை இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டு மக்களின் மனதையும் தொட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ராகவனிடம் கீதாவை சந்திக்கும்படியும், இந்தியாவில் அவரது குடும்பம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும்படியும் உத்தரவிட்டார். அதன்பேரில் ராகவன் தனது மனைவியுடன் சென்று கீதாவை சந்தித்தார். அப்போது கீதா பீகாரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

பாக். மக்களுக்கு நன்றி


கீதாவுக்கு இந்திய தூதரகம் சில போட்டோக்களையும் அனுப்பியது. அதில் இருந்த தனது தந்தை, வளர்ப்பு தாய் மற்றும் சகோதரர்களை கீதா அடையாளம் காட்டினார். இதனைத் தொடர்ந்து கீதாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை எடுத்தது.

அதன்படி நேற்று கராச்சியில் இருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கீதா புறப்பட்டார். அங்கிருந்து புறப்படும் முன்பு, ‘‘இதுவரை தன்னை பாதுகாத்த பாகிஸ்தான் மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கீதா கூறினார்.

எத்தி பவுண்டேசனை சேர்ந்த பைசல் எத்தி கூறும்போது, ‘‘அவர் உண்மையிலேயே எங்களை விட்டு பிரிந்து செல்லவில்லை. நாங்கள் தொடர்ந்து கீதாவுடன் தொடர்பில் இருப்போம். சமூக வலைதளங்கள் மூலமாகவும், சில நேரங்களில் நேரிலும் சந்தித்துக் கொள்வோம்’’ என்றார்.

இந்தியா வந்தார்


பின்னர் கராச்சியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட கீதா, காலை 10.30 மணிக்கு இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்க வந்தவர்களை பார்த்து கீதா உற்சாகமாக கையசைத்தார். சிவப்பு-வெள்ளை நிற சல்வார், கமீஸ் உடையில், துப்பட்டாவை தலையை மறைத்தபடி அணிந்தும் இருந்தார்.

கீதா டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். கீதா நாட்டுக்கு திரும்பியுள்ளார், அவரது குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் அவர் இந்தியாவின் மகள் தான் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டி.என்.ஏ. சோதனை


பின்னர் கீதா டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 2 பேர் ஓட்டலுக்கு சென்று டி.என்.ஏ. பரிசோதனைக்காக கீதாவின் ரத்தமாதிரிகளை சேகரித்துச் சென்றனர். அந்த ரத்த மாதிரி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் சோதனைக்கூடம் மற்றும் சி.பி.ஐ.யின் மத்திய தடய அறிவியல் சோதனைக்கூடம் ஆகியவற்றுக்கு அனுப்பப்படுகிறது.

வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் கீதாவின் தந்தை என்று அடையாளம் காட்டப்பட்ட ஜனார்தன் மஹதோவின் ரத்த மாதிரியும் கடந்த 24-ந் தேதியே சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ. பரிசோதனை துரிதமாக நடத்தப்பட்டு, 15 முதல் 20 நாட்களுக்குள் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று எய்ம்ஸ் டாக்டர் சுதிர்குப்தா கூறினார்.

எனவே விரைவில் கீதா தனது தந்தையை சந்திப்பார் என்று கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கீதாவுடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கீதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘‘மீண்டும் வீடு திரும்பியிருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது உண்மையாகவே அற்புதமான தருணம். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள அனைவரும் உங்கள் மீது அக்கறை செலுத்துவோம்’’ என்றார்.

பாகிஸ்தானில் கீதாவை 15 ஆண்டுகளாக வளர்த்துவந்த எத்தி பவுண்டேசன் நிறுவனர் பில்குயிஸ் எத்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கீதாவை அன்புடனும், பரிவுடனும் கவனித்துக் கொண்ட எத்தி குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் செய்தது விலை மதிப்பற்றது என்றாலும், உங்கள் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

பில்குயிஸ் எத்தி குஜராத் மாநிலம் ஜுனாகத் பந்த்வா பகுதியை சேர்ந்தவர் என்பதை அறிந்த பிரதமர் மோடி, அவரை குடும்பத்துடன் ஜுனாகத் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கீதாவை அவரது குடும்பத்துடன் சேர்க்க பாடுபடுவோம்
சுஷ்மா சுவராஜ் உறுதி

இந்தியா திரும்பியுள்ள கீதாவை நேற்று வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் கீதா மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சைகை மொழியில் பேசினார். அவர் கூறும்போது, ‘‘நான் இந்தியாவில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை நெகிழவைத்தது’’ என்றார். அப்போது அவரது தந்தை ஜனார்தனும் கீதாவை சந்தித்தார். ஆனால் கீதா அவரை ஏற்கவில்லை.

சுஷ்மா சுவராஜ் கூறும்போது, ‘‘கீதாவை அவரது குடும்பத்துடன் சேர்த்துவைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். தனது குடும்பத்தினரை கீதா ஏற்க மறுத்து இருக்கும் நிலையில் டி.என்.ஏ. சோதனையில் அவரது குடும்பம் உறுதியானால் நிலைமை சிக்கல் ஆகிவிடும். அப்படி ஏற்பட்டாலும் கீதாவை கவனிக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கீதாவிடமும் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும்படி கூறியிருக்கிறோம். இதற்காக அவரது குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து நினைவுகள் திரும்ப முயற்சி மேற்கொள்வோம். அதுவரை கீதா இந்தூரில் உள்ள வாய் பேசாத, காது கேளாதோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் தங்குவார். அங்கு அவருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்’’ என்றார்.

தனது குடும்பத்தை அடையாளம் காட்ட கீதா மறுப்பு
குடும்பத்தினர் அதிர்ச்சி

பாகிஸ்தானில் இருந்து திரும்பியுள்ள கீதாவை வரவேற்க அவரது குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு பூங்கொத்துகளுடன் சென்றனர். ஆனால் அவரை பாதுகாப்பு வீரர்கள் வேகமாக அழைத்துச் சென்றுவிட்டனர். விமான நிலையத்துக்கு வெளியே மனோஜ் என்பவர், தான் கீதாவின் சகோதரர் என்றும், கீதாவை வரவேற்க தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். நாங்கள் அவரை சந்தித்து முறைப்படி வரவேற்க விரும்புகிறோம். நம்பிக்கையை இழந்து இருந்த எங்களுக்கு இது முக்கியமான நிகழ்வு. இது ராமர் வனத்தில் இருந்து 14 வருடங்களுக்கு பின்னர் திரும்பியது போன்றது. இதுதான் எங்களுக்கு தீபாவளி என்று அவர் கூறினார்.

பைசாகி கண்காட்சியில் இருந்து காணாமல் போன சமயத்தில் கீதா திருமணமாகி, கணவருடன் வாழ்ந்து வந்தார் என்ற அதிர்ச்சி தகவலையும் மனோஜ் கூறினார். கீதாவின் தந்தை ஜனார்தன் மஹாதோ கூறும்போது, ‘‘நாங்கள் அவளை சந்திக்கும்போது அவள் எங்களை ஏற்றுக்கொள்வாள். அவள் இனி சாதாரண பெண் அல்ல, கடவுள்’’ என்றார்.

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கீதா இப்போது மஹாதோவை தனது குடும்பம் தான் என்று அடையாளம் காட்ட மறுக்கிறார்’’ என்றார். டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்னரே சரியான குடும்பத்தினரிடம் கீதா ஒப்படைக்கப்படுவார் என்று இந்திய அரசு கூறியுள்ளது.
கருத்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக