google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: பூகம்பம் பாதித்த மணிப்பூரில் மீட்புப்பணி தீவிரம்

புதன், 6 ஜனவரி, 2016

பூகம்பம் பாதித்த மணிப்பூரில் மீட்புப்பணி தீவிரம்

இம்பால் : பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், நேற்று முன்தினம் அதிகாலை, ரிக்டர் அளவில், 6.8 புள்ளியுடன் கடும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் மையம் கொண்ட மாநிலமான மணிப்பூரில், கட்டட இடிபாடுகளில் சிக்கி, எட்டு பேர் பலியாகினர்; 88 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில், 33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கடுமையாக பாதிக்கப்பட்ட, தமேங்லாங் மாவட்டத்திலும், அசாமில், சில்சார் மாவட்டத்திலும், மீட்புக் குழுவினர் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களும், கல்வி மையங்களும் நேற்று மூடிக் கிடந்தன.

மணிப்பூர் மாநில தலைமைச் செயலக கட்டடம் உட்பட, ஏராளமான கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சில பள்ளிகள் நொறுங்கி தரைமட்டம் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிப்பூரில், பவர் கிரிட் கார்ப்பரேஷனைச் சேர்ந்த மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு, மின் சப்ளையை மீண்டும் துவக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தாளுனர் உள்ளிட்ட மத்திய மருத்துவக் குழுவினரும், பூகம்பம் பாதித்த பகுதிகளில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூகம்பத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்க, மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், துண்டிக்கப்பட்டிருந்த தொலை தொடர்பு சேவைகள் மீண்டும் துவங்கி விட்டதாக, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக