Advertisement
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், நாட்டிலேயே அதிகமாக, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, அந்நாட்டு அரசு அவற்றை கறுப்புப்பட்டியலில், சேர்த்துள்ளது.இந்த விவரம் தெரியாமல், அப்பல்கலைக்கழகங்களில் சேர, அமெரிக்காவுக்கு சென்ற, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமானோர், ஐதராபாத் விமான நிலையங்களிலேயே தடுக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம், அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மாணவி கூறியதாவது: கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, முறையான ஆவணங்களுடன், கடந்த டிச., 30ல், அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களை, அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் திருடர்களை போல் நடத்தினர். விமானத்தில் இருந்து இறங்கிய எங்களை கைவிலங்கிட்டு, ஒரு அறையில் அடைத்தனர்.
ஒன்பது மணி நேரம் தீவிர விசாரணைக்கு பின், நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டோம். அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால், கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் சேர்ந்தது மட்டுமே, நாங்கள் செய்த குற்றம். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த, மற்றொரு மாணவர் கூறுகையில், 'முறையான ஆவணங்களுடன் நாங்கள் அமெரிக்கா சென்று இறங்கினோம். இருப்பினும், எங்களை, அந்நாட்டு அதிகாரிகள் கைவிலங்கிட்டு விசாரணை நடத்தினர்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக