google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: முதல்வரின் மவுனம் கலைவது எப்போது?- அதிமுக கூட்டணிக்கு ஏங்கும் சிறிய கட்சிகள்

சனி, 5 மார்ச், 2016

முதல்வரின் மவுனம் கலைவது எப்போது?- அதிமுக கூட்டணிக்கு ஏங்கும் சிறிய கட்சிகள்

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் கூட்டணி அழைப்புக்காக சிறிய கட்சிகள் காத்திருக்கின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துவிட்டது. விரைவில் தேமுதிகவும் அக்கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணியோ தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டது. பாஜகவுடன் சமக இணைந்துள்ளது. பாமக தன் அணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என கூறிவருகிறது.
ஆனால், தேர்தல் பணிகளை முதலில் தொடங்கிய ஆளுங்கட்சியான அதிமுக இதுவரை தேர்தல் கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக கூட்டணியில் சேர, மனிதநேய மக்கள் கட்சி, செ.கு தமிழரசனின் இந்திய குடியரசுக்கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வேர்டு பிளாக், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பன்ருட்டி வேல்முருகனின் இந்திய வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச்செயலாளரான முதல்வர் ஜெயலலிதாவிடம் மட்டுமே உள்ளது என்பதால், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முதல்வரின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டணிக்கு காத்திருக்கும் கட்சிகளை பொறுத்தவரை, மனிதநேய மக்கள் கட்சி, செ.கு தமிழரசனின் இந்திய குடியரசுக்கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற கட்சிகளின் தலைவர்கள் தங்களின் இடத்துக்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் கூறுகையில்,‘‘ நான் கடந்த 1991ம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இருக்கிறேன். இப்போதும் அதே கூட்டணியில் தான் நீடிக்கிறேன். 2001, 2011 தேர்தல்களில் அப்போதைய கூட்டணி சூழல்களால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறையும் வாய்ப்பு கேட்டு கடிதம் அளித்துள்ளேன். நிச்சயம் முதல்வர் வாய்ப்பு அளிப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.
வேட்டவலம் மணிகண்டன் இம்முறை கீழ் பெண்ணாத்தூர், விருதாச்சலம், மயிலம் ஆகிய தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன் மூர்த்தி. தொடர்ந்து, 2011 தேர்தலில் தனியாக போட்டியிட்டு 21 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்த ஜெகன் மூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போதும் அதிமுக கூட்டணியில் இடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக பூவை ஜெகன் மூர்த்தி கூறுகையில்,‘‘ எங்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வாக்குகள் உள்ளன. அதை முன்னிறுத்தி, கூட்டணியில் சேருவதற்கு கடிதம் அளித்துள்ளேன். வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவோம்’’ என்றார்.
இதேபோல், மற்ற கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் மவுனம் எப்போது கலையும் என காத்திருக்கின்றனர்.
தமாகா எந்த அணி?
கூட்டணி தொடர்பான மற்ற கட்சிகளின் நிலைப்பாடுகள் ஓரளவுக்கு தெரிந்துவிட்டநிலையில், தமாகா மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை. இரண்டு கட்சிகளும் மார்ச் 2-வது வாரத்தில் தங்கள் நிலைப்பாடுகளை அறிவிப்பதாக கூறியுள்ளன. இதில், தமாகா பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக